முதன்மை செய்திகள்

நீட் முடிவுகளில் தமிழகத்துக்கு கடைசி இடம் பிடித்ததுக்கு, பினாமி அரசு பொறுப்பேற்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்

நீட் முடிவுகளில் தமிழகத்துக்கு கடைசி இடம் பிடித்ததுக்கு, பினாமி அரசு  பொறுப்பேற்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் :  இளநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. தேசிய சராசரி தேர்ச்சி விகிதத்தை விட மிகக்குறைந்த தேர்ச்சி விகிதத்தையே தமிழகம் பெற்றிருக்கிறது. நீட் தேர்வுக்கு அரசு பள்ளி மாணவர்களை தயார் படுத்துவதில் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டதையும், நீட் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் தோற்க வேண்டும் என்பதில் மத்திய அரசு வென்றிருப்பதையும் இது காட்டுகிறது.

தேசிய அளவில் நீட் தேர்வுகளில் பங்கேற்ற 12.70 லட்சம் மாணவ, மாணவியரில் 7.14 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 56.27% தேர்ச்சியாகும். அதேநேரத்தில் தமிழகத்திலிருந்து இத்தேர்வுகளில் பங்கேற்ற ஒரு லட்சத்து 14,602 மாணவர்களில் வெறும் 45,336 பேர் மட்டுமே, அதாவது 39.55% மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தியாவிலுள்ள 29 மாநிலங்களில் தமிழகம் தான் கடைசிக்கு முந்தைய இடத்தில் உள்ளது. நாகலாந்து மாநிலம் மட்டும் தான் தமிழகத்திற்கு கீழ் கடைசி  இடத்தில்  இருக்கிறது. 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களைக் கொண்ட பட்டியலில் தமிழ்நாடு 34ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. அதாவது கடைசியிலிருந்து 3ஆவது இடத்தில் தமிழகம் உள்ளது. 

அதனால் பெரும்பான்மையான மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகவில்லை.  கடைசி நேரத்தில் நீட் தேர்வை கட்டாயம் எழுதியாக வேண்டும் என்ற சூழல் ஏற்பட்ட நிலையில், எந்த விதமான முன்தயாரிப்பும் இல்லாமல் தமிழக மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். அவர்களில் 38.83% மாணவர்கள்  தேர்ச்சி பெற்றனர். ஆனால், இம்முறை நீட் தேர்வு உறுதி என்ற எண்ணம் ஏற்பட்டிருந்த நிலையில், மாணவர்கள் முன்கூட்டியே தேர்வுக்கு தயாராகி வந்தனர். ஆனாலும், 39.55 விழுக்காட்டினர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பது பெரும் பின்னடைவு ஆகும். இதற்கு பினாமி அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

நீட் தேர்வு என்பதே பயிற்சி நிறுவனங்கள் மூலம் பெருநிறுவனங்கள் பணம் பறிப்பதற்காக செய்யப்பட்ட ஏற்பாடு என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். எனவே, சட்டப்போராட்டத்தின் மூலம் நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவது தான் நமது முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும். அதுவரை அரசு பள்ளி மாணவர்களுக்கு திறமையான ஆசிரியர்களைக் கொண்டு, தரமான பயிற்சி வழங்குவதன் மூலம் நீட் தேர்வில் தமிழகம் முதலிடம் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments